ராகுல்காந்தியை பிரதமராக்க காங்கிரசார் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேச்சு

ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

Update: 2018-12-26 22:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் திருப்புல்லாணியில் நடைபெற்றது. முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மாநில அளவிலான பூத் கமிட்டி பார்வையாளர் துரைதிவ்யநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, சாயல்குடி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது:-

இன்னும் 3 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது மிக மிக முக்கிய தேர்தலாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 தினங்களுக்குள் 100 சதவீத பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்த பட்சம் 10 பேரையாவது நியமிக்க வேண்டும். கடந்த 4½ ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கூறினார். மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு ஊழல் முறைகேட்டில் சிக்கி மக்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு அவர்களது சொந்த பிரச்சினைகளையே கவனித்து வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் மத்திய, மாநில அரசுகள் அகற்றப்படும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக கருத்து வேறுபாடுகளை மறந்து காங்கிரசார் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்பாபு, விக்டர், திருப்புல்லாணி கிழக்கு வட்டார தலைவர் சேது பாண்டியன், மேற்கு வட்டார தலைவர் கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் அகமதுகபீர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தாமரை கண்ணன், பாம்பன் ஆம்ஸ்ட்ராங்க், துல்கிப்கான், நகர தலைவர் கோபி, வக்கீல் அன்புச்செழியன், காருகுடி சேகர், பிரமிளா விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்