வில்லியனூர் அருகே நீரில் மூழ்கி மாணவன் பரிதாப சாவு
வில்லியனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக செத்தான்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். தொழிலாளி. இவரது மகன் சரவணன்(வயது13). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி நேற்று மதியம் ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றான். அங்கு ஏற்கனவே சில சிறுவர்கள் குளித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சரவணன் சென்று விட்டான். இதனால் மூச்சு திணறி அலறினான். இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி வழியாக சென்ற சிலர் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு 7 மணி அளவில் சரவணனின் உடலை பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.