மேலாண் இயக்குனரை சிறைபிடித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

மேலாண் இயக்குனரை சிறைபிடித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-26 22:45 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இருந்தபோதிலும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் நேற்று அவர்கள் பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலாண் இயக்குனர் அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் மேலாண் இயக்குனரை சிறைபிடித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் மேலாண் இயக்குனர் முத்துக்கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசிடம் பேசி சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.


மதிய சாப்பாட்டு வேளையிலும் அவரை வீட்டிற்கு செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார்.

இந்தநிலையில் பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ.வும் ஊழியர் சங்க பிரதிநிதிகளை போனில் தொடர்புகொண்டு பேசினார். சம்பளம் தொடர்பாக முதல்- அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அவரது சமரசத்தையும் ஏற்காமல் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்