தலைமை செயலகம் எதிரே ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்-சிறுமிகள் கடலோர பாதுகாப்புக்குழுவினர் மீட்டனர்
புதுவை தலைமை செயலகம் எதிரே ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்-சிறுமிகளை கடலோர பாதுகாப்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் நாள் தோறும் கடல் அலையில் கால்களை நனைத்து விளையாடி வருகிறார்கள்.
ஆனால் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டபோதிலும் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் தடையை மீறி குளித்து வருகிறார்கள். எனவே சுற்றுலா துறையின் சார்பில் உள்ளூர் மீனவர்களை கொண்டு கடலோர பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கடலில் குளிப்பவர்களை எச்சரித்து அனுப்பி வருகிறார்கள்.
இந்தநிலையில் புதுவை வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவர் ஸ்ரீகாந்த் (வயது 10), சிறுமிகள் தமிழரசி (12), ஆட்டுப்பட்டி கலைவாணி (13) ஆகியோர் செயற்கை மணல் பரப்பு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிறுவர்-சிறுமிகள் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்கள் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர்.
அவர்களின் சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த வெள்ளத்தான், சுதன், ராஜ்குமார், தினேஷ் ஆகியோர் விரைந்து சென்று கடலில் குதித்து ஸ்ரீகாந்த், தமிழரசி, கலைவாணி ஆகியோரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் எதிரொலியாக கடலில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் கரைக்கு செல்லும்படி வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.