காகித ஆலை கழிவுநீரால் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை சட்டமன்ற ஆய்வுகுழு தலைவர் பேட்டி
காகித ஆலை கழிவுநீரால் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற ஆய்வு குழு தலைவர் செம்மலை கூறினார்.
கரூர்,
தமிழ்நாடு சட்டமன்ற ஆய்வு குழுவினர் அதன் தலைவர் செம்மலை தலைமையில் நேற்று கரூர் வந்தனர். அவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்், மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் ஆய்வு குழுவினர், தமிழ்நாடு காகித ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர் அதைத்தொடர்ந்து மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட திருக்காடுதுறை ஆலமரத்துமேடு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் மானிய உதவிகள் பெற்று சுயதொழில் செய்துவரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற குழுவினர், அங்குள்ள வசதிகள் குறித்தும், அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் சட்டமன்ற சிறப்பு செயலாளர் வசந்திமலர், குழு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் லியாகத்(குளித்தலை), அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரோசி வெண்ணிலா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயகுமார் உள்பட அனைத்துத்துறை சார்ந்த முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அந்த குழுவின் தலைவர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நவீன எந்திரங்கள் மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு காகித ஆலை செயல்படுகிறது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் பொதுத்துறை நிறுவனமாக இது விளங்குகிறது.
இங்கு, 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்திற்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமாயின் அதுகுறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வு குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன் (பவானிசாகர்), சண்முகம் (கிணத்துகடவு), செழியன் (திருவிடைமருதூர்), பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.