துவரங்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் என்ஜினீயர் உயிரிழந்தார். மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-12-26 21:45 GMT
வையம்பட்டி,

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 58). இவரது மகன் அரவிந்தராஜன் (23). என்ஜினீயர். பெரியண்ணனின் மகள்கள் கோகிலா (26), தேன்மொழி (20) ஆகிய இருவரும் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி விமான நிலையம் வந்தனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக பெரியண்ணன் மற்றும் அரவிந்தராஜன் ஆகியோர் ஒரு வாடகை காரில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை அழைத்து கொண்டு அனைவரும் காரில் புறப்பட்டனர். காரில், கோகிலாவின் குழந்தை ஜோசியாவும் இருந்தது. காரை மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் ஓட்டினார்.

அந்த கார், நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பில் மோதி எதிர் திசையில் உள்ள சாலைக்கு சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அரவிந்தராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 4 பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த டிரைவர் பாண்டியராஜன் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்