தைலமரக்கன்றுகள் நட அழிக்கப்பட்ட வரலாற்று சின்னம் வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு
தைலமரக்கன்றுகளை நடுவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்களை வனத்துறையினர் அழித்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் வனப்பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் உள்ளன. இந்த கற்கால பண்பாட்டு சின்னங்கள் கற்பாறைகளை கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மையத்தில் நெடுங்கல் செங்குத்தாக நட்டு வைக்கப்பட்டு உள்ளன. வரலாற்று சின்னங்களான இவை வனத்துறையினரால் எந்திரங்களை கொண்டு தைல மரக்கன்றுகள் நடுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
இதை அறிந்த தொல்லியல் ஆய்வு கழக தலைவர் மேலப்பனையூர் ராஜேந்திரன், மங்கனூர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து ராஜேந்திரன் கூறியதாவது:-
கண்ணனூரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல், கற்குவியல் வகையை சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைக்கும்போது, அதன் மேல் வட்ட வடிவத்தில் கற்குவியலை அமைத்து, அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அமைப்பது வரலாற்று காலத்துக்கு முற்பட்டதாகும். இதன் முக்கியத்துவம் தெரியாமல் வனத்துறையினர் தைலமரக்கன்றுகள் நடுவதற்காக, எந்திரங்களை கொண்டு இந்த வரலாற்று சின்னங்களை அழித்து இருக்கிறார்கள். இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் பொக்லைன் எந்திரங்களை கொண்டு பெருங்கற்கால பண்பாட்டு நினைவு சின்னங்களை உடைத்தும் கற்களை பிடுங்கி போட்டும் அழித்து இருக்கிறார்கள்.
இதனை பாதுகாக்காமல் விட்டால் வருங்கால சந்ததியினர் வரலாற்றை தெரிந்து கொள்ள இயலாமல் போய் விடும். இத்தகைய நினைவு சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.