கீரமங்கலம் பகுதியில் புயல் பாதிப்பு; தரமில்லாத இளநீர், தேங்காய்களை எரித்த விவசாயிகள்
கீரமங்கலம் பகுதியில் புயலால் சாய்ந்த தென்னை மரங்களில் இருந்த தரமில்லாத இளநீர், தேங்காய்களை விவசாயிகள் எரித்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு எந்தவித உதவிகளும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து உள்ளது. இதனால் ஒவ்வொரு தோட்டத்திலும் சாய்ந்த அத்தனை மரங்களும் அப்படியே கிடக்கிறது. தேக்கு, குமில் போன்ற வேரோடு சாய்ந்த மரங்கள் மீண்டும் துளிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து அவற்றை வெட்டி அகற்ற முடியாமலும் அழிக்க முடியாமலும் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர்.
இந்நிலையில் கீரமங்கலம், மேற்பனைக்காடு, வடகாடு, மாங்காடு கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தங்கள் தோட்டங்களில் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தவித்த விவசாயிகளில் ஒருசிலர் தற்போது தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி அகற்றியதுடன் அவற்றுடன் இருந்த இளநீர், தேங்காய்களையும் அகற்றி அவற்றை விற்க முடியாமல் சாலை ஓரங்களில் மொத்தமாக கொட்டி தீ வைத்து எரித்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், செந்தன்குடி, செரியலூர் மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களில் தென்னை தோப்புகளுக்குள் பலா, தேக்கு, சந்தனம், குமிழ் போன்ற மரங்களையும் மற்றும் மிளகு கொடியும், அதன் கீழே எலுமிச்சை, துளசி, மாசிப்பச்சை போன்ற செடிகளையும் விவசாயிகள் வளர்த்து வந்தனர். கஜாபுயலால் அனைத்தையும் விவசாயிகள் இழந்து விட்டனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் இன்னும் மீண்டுவர முடியாமல் தற்போது தான் மரங்களை அகற்றலாம் என்று தோட்டத்தில் இறங்கினால் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவது சவாலாக உள்ளது. முதல்கட்டமாக தென்னை மட்டைகளையும் இளநீர், தேங்காய்களையும் வெட்டி அகற்றி வருகிறோம். தற்போது அகற்றப்படும் தேங்காய், இளநீர் போன்றவை தரமில்லை என்று வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் அவற்றை சாலை ஓரங்களிலும் தோட்டங்களிலும் மொத்தமாக குவித்து வைத்து தீ வைத்து எரித்து வருகிறோம்’ என்றனர்.