குன்னூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு
குன்னூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. பழமை வாய்ந்த ஊட்டி மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவர்கள் ஊட்டி மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரெயிலில் திருட்டு சம்பவங்கள் நடந்தால் அதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க வசதியாக இருக்கும் ஜி.ஆர்.பி. செயலியை அறிமுகம் செய்து, சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பின்னர் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டி, குன்னூரில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. ரெயில்களில் திருட்டு நடைபெறாமல் இருக்க ரெயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். ஜி.ஆர்.பி. செயலி குறித்து சுற்றுலா பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் திருட்டு சம்பவங்கள் குறித்து உடனடியாக புகார் அளிக்கலாம். மேலும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் புகார் அளிக்கலாம். இவ்வாறான புகாரின் மீது அதே ரெயிலில் உள்ள துப்பாக்கி ஏந்திய போலீசார் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த செயலி சென்னை, திருச்சி போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.