கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-26 22:00 GMT
நாகப்பட்டினம், 

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடல் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாகை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பா, கமல்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து இந்திய விவசாயிகள் சங்க ஒன்றிய குழு மாநில பொருளாளரும், காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளருமான ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், பாதிக்கப்பட்ட தென்னை, வாழை, பலா, முந்திரி, புளி, சவுக்கு போன்ற அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

2016-17-ம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மற்றும் 2017-18-ம் ஆண்டுக்குரிய பயிர்க்காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால், துணைத்தலைவர் சாமிநாதன், மீனம்பநல்லூர் மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்