மணல் குவாரியை மூடக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தற்கொலை மிரட்டல் பொதுமக்கள், போலீசார் இடையே வாக்குவாதம்

மணல் குவாரியை மூடக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் பொதுமக்கள், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-12-26 23:15 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்படுகிறது. இந்த மணல் குவாரி மூலம் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து மணல் எடுக்கப்படுவதால் திருமானூர் பகுதியில் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய போதிய நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

எனவே திருமானூரில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியை உடனே மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 22-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியை மூடக்கோரி அம்மனிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.

அப்போது அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசர் (வயது 62) என்பவர் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென திருமானூரில் அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறிக்கொண்டு, கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து அவர் மேலிருந்து துண்டு பிரசுரங்களை வீசினார்.

அந்த துண்டு பிரசுரங்களில் கூறப்பட்டிருந்ததாவது:-

பொதுப்பணித்துறைக்கு, காவல் துறை துணை போகக்கூடாது. இதுவரை திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் 25 ஆண்டுகளாக 56 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இனியும் இது தொடர்ந்தால் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். மேலும் இந்த கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 30 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிநீர் மற்றும் மணல் இரண்டையும் எடுத்தால் எங்கள் பகுதி மக்கள் வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த திருநாவுக்கரசரிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். அப்போது அவர் மணல் குவாரியை உடனே மூடவேண்டும்.

இல்லை என்றால் கீழே குதித்துவிடுவேன் என்று கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் திருநாவுக்கரசரை மீட்க செல்போன் கோபுரம் மீது ஏற முயன்றனர். அப்போது அங்கிருந்த கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் சிலர் ஒரு வாளியில் வயலுக்கு அடிக்கக்கூடிய மருந்தை (விஷம்) தண்ணீர் கலந்து வைத்துக்கொண்டு, “திருநாவுக்கரசரை கீழே இறக்க முயன்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொள்வோம்” என்று மிரட்டல் விடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் உடனடியாக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை மூட உத்தரவிட்டார். இதன் பின்னர் அவர் கூறுகையில், இன்று (நேற்று) மணல் குவாரியை மூடிவிட்டோம். இனி வரும் நாட்களில் செயல்பட வேண்டுமா?, வேண்டாமா? என்பதை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதை அடுத்து மதியம் 1 மணி அளவில் திருநாவுக்கரசர் கீழே இறங்கி வந்தார்.

அதன்பிறகு அதிகாரிகள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது கோட்டாட்சியர் கூறுகையில், இதுகுறித்து உடனடியாக அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். நாளை (இன்று) மணல் குவாரி செயல்படுமா?, செயல்படாதா? என கலெக்டர் உத்தரவிடுவார் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு சாதகமாக உத்தரவு வரவில்லை எனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்