14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, பலியானவர்களின் நினைவாக குமரி கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி,
தமிழக கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியதில் கன்னியாகுமரியிலும் ஏராளமானோர் பலியானார்கள். அவர்கள் நினைவாக கடந்த 2005-ம் ஆண்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் நினைவு ஸ்தூபியுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது. சுனாமி தாக்கிய 14-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று அரசு சார்பில் கன்னியாகுமரியில் உள்ள ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கலந்துகொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் தம்பித்தங்கம், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் நாராயண பாலன், வருவாய் ஆய்வாளர் திவான், கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் வக்கீல் ஜெலஸ்டின் தலைமையில் குமரி மீன் தொழிலாளர்கள் சங்க தலைவர் அலெக்ஸ்சாண்டர், மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி, கவுரவ தலைவர் என்.அந்தோணி, வக்கீல் மரிய ஸ்டீபன், நிர்வாகிகள் செல்வராஜ், தனிஸ், சோரீஸ், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இதேபோல் அந்தந்த மீனவ கிராமங்களிலும் மீனவர்களின் வள்ளம், கட்டுமரம் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மணக்குடியில் புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவு திருப்பலி நடைபெற்றது. பங்கு அருட்பணியாளர்கள் நடத்திய இந்த நினைவு திருப்பலியில் மணக்குடி மீனவ மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் என கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன ஊர்வலமாக சுனாமியில் பலியானவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
அங்கு பங்கு தந்தையர்கள் முன்னிலையில் சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பலியானவர்களின் நினைவாக சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுனாமி நினைவு தினத்தையொட்டி நேற்று மணக்குடி மீனவ கிராம மக்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல் குமரி கடற்கரை கிராமங்களில் பல இடங்களில் மவுன ஊர்வலம் நடந்தது.