சேலையூர் அருகே 12 ஜோதிர்லிங்க தரிசனம் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது
சேலையூர் அருகே பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நேற்று தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை இந்த சிவ லிங்கங்களை பொதுமக்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம்.;
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில், 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதில் சோம்நாத், விஷ்வநாத், திரியம்பகேஸ்வரர், ஓங்காரேஸ்வர், மகாகாளேஸ்வரர், நாககேஷ்வர், வைத்தியநாத், கிருஷ்ணேஷ்வர், பீமாசங்கர், கேதார்நாத், மல்லிகார்ஜூன், ராமேஷ்வர் என 12 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் சுமார் 10 இடங்களில் இந்த ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 12 சிவ லிங்கங்களை பல லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
நாட்டில் 12 இடங்களில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் உள்ள சிவ லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்கும் வகையில், அந்தந்த கோவில்களில் உள்ள சிவலிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அனுபவம் கிடைக்கும் வகையில் இந்த ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
ராஜகீழ்ப்பாக்கத்தில் நேற்று முதல் தொடங்கிய இந்த 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதற்கு அனுமதி இலவசம் என பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பிரம்மகுமாரிகள் அமைப்பு நிர்வாகிகள் பீனா, கலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.