பொன்னேரியில் லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலி

பொன்னேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

Update: 2018-12-26 22:45 GMT
பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவர் இரும்பு கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பொன்னேரி தாலுகா அலுவலகம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த ஒரு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட பெருமாள் அந்த லாரியின் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டார்.

இதில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்தவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் பெருமாளின் உடலை கைப்பற்றி போலீசார் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரியின் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்