பெரம்பலூர், அரியலூர் தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், அரியலூர் தாலுகா அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
பெரம்பலூர்,
கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில், அச்சங்கத்தினர் அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.