நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக பெரம்பலூர் பணிமனை கிளையில் இருந்து கடந்த சில மாதங்களாக வீரகனூர், விருத்தாச்சலம், பண்ருட்டி, பாடாலூர், செட்டிக்குளம், மண்ணச்சநல்லூர், களரம்பட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளும் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பயணிகளின் வருகை குறைந்து வருவதாலும், போதிய வசூல் இல்லை என்ற காரணத்தைக்கூறி ஞாயிற்றுக்கிழமை தோறும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பெரம்பலூரில் இருந்து களரம்பட்டி கிராமத்திற்கு காலை, மாலை ஆகிய 2 வேளைகளில் செல்லும் அரசு பஸ்சும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதாம். இது குறித்து களரம்பட்டி சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் நேற்று காலையில் களரம்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். அப்போது அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பஸ்களை போல வசூலை மட்டும் கருத்தில் கொண்டு இயக்காமல், பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையில் இயக்க வேண்டும் என்றும், கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட பஸ்களை, அதே வழித்தடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அங்கு வந்த பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.