தூத்துக்குடி அருகே பரபரப்பு பெண் தபால் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு வங்கி பணியாளர் உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி அருகே பெண் தபால் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வங்கி பணியாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சாயர்புரம்,
தூத்துக்குடி அருகே பெண் தபால் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வங்கி பணியாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–
பெண் தபால் ஊழியர்
தூத்துக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தபால் நிலையத்தில் ஊழியராக உள்ளார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவார். அப்படி சென்று வரும் போது கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டை சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த தனியார் வங்கி பணியாளரான ஆனந்த் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒன்றாக செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர்களான கனிபாண்டி மகன் ராஜீவ்காந்தி (28), செல்வராஜ் மகன் ராஜசேகர் (29), ஜெயபாண்டி மகன் சக்திவேல் (22) ஆகியோர் அந்த இளம்பெண்ணை சந்தித்தனர்.
பாலியல் தொந்தரவு
அப்போது, அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் நாங்கள் அழைக்கும் இடங்களுக்கு வர வேண்டும். இல்லையென்றால் ஆனந்துடன் நீ இருக்கும் படங்களை பேஸ்புக், வாட்ஸ்–அப்பில் போட்டுவிடுவோம் என்றும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் தெரிகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சிவசண்முகம், 294பி, 417, 506(2) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாஜோஸ் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
இதையடுத்து ஆனந்த், ராஜீவ்காந்தி, ராஜசேகர், சக்திவேல் ஆகிய 4 பேரையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜீவ்காந்தி, ராஜசேகர் ஆகியோர் பொக்லைன் ஆபரேட்டராகவும், சக்திவேல் கட்டிட தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் தபால் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வங்கி பணியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.