தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-26 22:15 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன்களை சட்ட நடவடிக்கைகள் மூலம் வசூல் செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும். 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குறைக்கப்பட்ட ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அலுவலர்கள் கடந்த 21–ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.600 கோடி பாதிப்பு

இதன் தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 270 வங்கி கிளைகள் உள்ளன. இதில் சில தனியார் வங்கி கிளைகளை தவிர 220 வங்கி கிளைகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சுமார் 1,600 பேர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் தினமும் சுமார் ரூ.600 கோடி வரை பணபரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்த பணபரிவர்த்தனை வேலைநிறுத்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தேனா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த சங்கரநாராயணன், கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்