நெல்லையில் ஒரே நாளில் 5 பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது ரூ.18 ஆயிரம் மீட்பு-மோட்டார் சைக்கிள் பறிமுதல்

நெல்லையில் ஒரே நாளில் 5 பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-26 08:05 GMT
நெல்லை, 

நெல்லையில் ஒரே நாளில் 5 பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மீட்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்களிடம் கைப்பை பறிப்பு

நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, தெற்கு பஜார், இலந்தைகுளம் ஆகிய 5 இடங்களில் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் தனியாக நடந்து சென்ற பெண்களின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அந்த கைப்பைகளில் பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளையன் கைது

அதில், மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று ஒரு பெண்ணிடம் கைப்பையை பறித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. மர்ம நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த மோட்டார் சைக்கி ளில் சென்ற நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த ஓமநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (வயது 23) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது கூட்டாளியுடன் சேர்ந்து பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை அவன் ஒப்புக் கொண்டான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர்.

பின்னர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பெண்களிடம் கைப்பைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மேலும் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். மைக் மூலம் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

நெல்லை டவுன் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் எண் பதிவானது. அந்த எண் மூலம் கொள்ளையர்கள் இசக்கிமுத்து, அவனது நண்பர் மணிகண்டன் என்பதை தெரிந்து கொண்டோம். அவர்களை பிடிக்க அனைத்து பகுதிகளிலும் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினோம்.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

நேற்று இசக்கிமுத்து கருங்குளம் சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கினான். அவனிடம் இருந்து ரூ.18 ஆயிரத்தை மீட்டதுடன், கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டன் தலைமறைவாகி உள்ளான். அவனை தேடி வருகிறோம். இவர்கள் மீது ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு, ஆடு திருடிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்