கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2018-12-25 23:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து தேவாலயங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் தேவாலய வளாகத்தில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் வகையில் தத்ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவர்கள் அவர்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் முன்பு பல வண்ணங்களில் ஸ்டார்கள் தொங்க விட்டு, மின்விளக்குகளால் மரங்கள், வீட்டை அலங்கரித்து இருந்தனர்.

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகேயுள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடந்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா தேவாலயத்திலும், திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயத்திலும், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஆரணி நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வழங்கி மகிழ்ந்தனர்.

கார்த்திகேயன் சாலையில் உள்ள பெந்தகோஸ்தே கிறிஸ்துவ தேவாலயத்திலும், காணிக்கை அன்னை தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெருந்துறைப்பட்டு, அந்தோணியார்புரம், தென் கரும்பனூர், பழையனூர், அள்ளிக்கொண்டாப்பட்டு, தாங்கல், விருது விளங்கினான் உள்ளிட்ட பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போளூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. போளூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், ஆற்காடு லுத்தரன் தேவாலயம் ஆகியவற்றில் நள்ளிரவு கூட்டு திருப்பலி, சிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர். வீடுகளில் குடில்கள் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கேக், பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்