நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எனது நோக்கம் - ஈரோட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-12-25 22:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் செல்லையன் என்கிற ராஜாவுக்கு பாராட்டு விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது. விழாவுக்கு எஸ்.கே.எம். நிறுவனத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு இறகு பந்து கழக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், செயலாளர் அருணாச்சலம், துணைச்செயலாளர் அருண், துணைத்தலைவர் மாறன், பி.வி.பி. பள்ளிக்கூட தாளாளர் எல்.எம்.ராமகிருஷ்ணன், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, ஹட்சன் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரமோகன், கோவை ஸ்கேன்ஸ் உரிமையாளர் இளங்கோவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் செல்லையன் என்கிற ராஜாவுக்கு நினைவு பரிசாக வீரவாள் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழக இறகு பந்து கழகத்தின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ‘டோனமெட் சாப்ட்வேர்’ என்ற புதிய சாப்ட்வேர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் வெளிப்படை தன்மை இருப்பதால் தகுதியான வீரர் -வீராங்கனைகள் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு சென்று விளையாட முடியும்.

நான் அரசியல் வாதி அல்ல. அதுபற்றி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நமக்கு போதுமான மழை இருக்கிறது. ஆனால் அதை நாம் சேமிக்க தவறிவிட்டோம். காவிரியில் இந்த ஆண்டு 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி பிரச்சினை என்பது கடந்த 140 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் தான் அதிகமழை இருக்கிறது. ஆனால் கடந்த சில காலங்களாக மழைநீரை தேக்கி வைக்க நாம் வசதிகள் ஏதும் செய்யவில்லை. அத்திக்கடவு -அவிநாசி திட்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் திட்ட மதிப்பு ரூ.13 கோடி.

ஆனால் இன்று அதன் திட்ட மதிப்பு ரூ.3 ஆயிரத்து 200 கோடி. ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என்றாலும் அந்த திட்டத்தை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் என்னுடைய நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்