சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய கொடுமை - ரத்தவங்கி ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்திய கொடுமை நேர்ந்துள்ளது. இது தொடர்பாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் பணியாற்றும் 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 24 வயதான அந்த பெண் 2-வது முறையாக கர்ப்பமானார்.
இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த 3-ந்தேதி அந்த கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் ‘ஓ பாசிட்டிவ்’ வகை ரத்தம் வேண்டும் என்று கேட்டதன்பேரில் அந்த ரத்த வங்கியில் இருந்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கர்ப்பிணிக்கு அந்த ரத்தம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சாத்தூர் வாலிபர் ஒருவர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்ததானம் செய்துள்ளார். பின்னர் அவர், வெளிநாடு செல்வதற்காக மதுரைக்கு வந்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்த போது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ரத்ததானமாக கொடுத்த ‘ஓ பாசிட்டிவ்’ வகை ரத்தத்தை தனது உறவினர் பெண்ணுக்கு செலுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை என்று தெரிவித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், அந்த ரத்தம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே ஆட்டோ டிரைவரின் கர்ப்பிணி மனைவிக்கு அந்த ரத்தம் ஏற்றப்பட்டுவிட்டதால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த பெண் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் இப்பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து வந்த டாக்டர் பபிதாகுமார் மற்றம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர்கள் பழனிசாமி (விருதுநகர்), ராம்கணேஷ் (சிவகாசி) ஆகியோர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, சாத்தூர் வாலிபர் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த சாத்தூர் கர்ப்பிணி பெண்ணின் கணவரான ஆட்டோ டிரைவர் விசாரணை நடந்த இடத்தில் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ரத்த வங்கி லேப் டெக்னீசியன்கள் 2 பேரும், ஆலோசகரும் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:-
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ரத்த வங்கியில் பணியாற்றிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மனித தவறு உறுதி செய்யப்பட்டால் அதற்கு பொறுப்பானவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.