பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகள்
பொங்கல் பண்டிகையையொட்டி நத்தம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
நத்தம்,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும், ஒருவழி பிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பொங்கல் வைக்கும்போது கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆவிச்சிபட்டி, சேர்வீடு, குட்டூர், காசம்பட்டி, வத்திப்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கரும்பு சாகுபடி காலம் குறைந்தபட்சம் 10 மாதங்களாகும். கரும்பை வேரோடு அறுவடை செய்து விடுவதால் மறுமுறை வளராது. ஒரே முறை மட்டுமே மகசூல் கிடைக்கும். மேலும் இந்த கரும்பு அதிக இனிப்பு தன்மை வாய்ந்தது. கரும்பு சாகுபடி முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். அதுவும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.
இந்த ஆண்டு பரவலாக பெய்த மழையை பயன்படுத்தி, கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களுக்கு முன்பு அவை வெட்டி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக இந்த பகுதிகளில் விளையும் கரும்புகள் மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக தற்போதே வியாபாரிகள் கரும்புக்கு வாங்க விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து வருகின்றனர். கரும்பு நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் போதிய விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.