வேடசந்தூர் அருகே குடகனாற்றின் கரையோரத்தில் சுடுகாட்டில் மண் அள்ளும் மர்ம கும்பல்
வேடசந்தூர் அருகே குடகனாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டில் மர்ம கும்பல் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடலை, குடகனாற்றின் கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்கின்றனர். குடகனாற்றில் மர்ம கும்பல் மணல் அள்ளி சென்றனர். இதனால் குடகனாறு பாறையாகவே காட்சி அளிக்கிறது.
இதனால் அந்த கும்பலின் பார்வை, ஆற்றின் கரையோர பகுதிகள் மீது திரும்பியது. இதையடுத்து குடகனாற்றின் கரையில் இருக்கும் சுடுகாட்டில் சமீபகாலமாக மண் அள்ளி வருகின்றனர். அதுவும் இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரத்துடன் வரும் மர்ம கும்பல், மண் அள்ளி லாரிகளில் கடத்தி செல்கின்றனர்.
இதனால் சுடுகாட்டில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி விட்டது. மேலும் மண் அள்ளுவதால் இறந்தவர்களின் உடலை புதைத்த இடத்தில் இருந்து எலும்பு கூடுகள் வெளியே தெரிகின்றன. அந்த எலும்பு கூடுகளை வீசி விட்டு, தொடர்ந்து மர்ம கும்பல் மண் அள்ளி செல்கின்றனர். இதனால் சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிக ஆழத்துக்கு மண் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல் கனமழை நேரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மழை வெள்ளம் சுடுகாடு வழியாக விவசாய நிலத்துக்குள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, சுடுகாட்டில் மண் அள்ளும் கும்பலை தடுக்க வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.