குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி
குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;
குளச்சல்,
குளச்சல் சைமன் காலனியை சேர்ந்தவர் பர்னபாஸ் (வயது 63), சைமன்காலனி முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் கடந்த 22-ந் தேதி அந்த பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பர்னபாஸ் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடை பயிற்சி சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.