தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 144 வாகனங்கள் தீவைத்தும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14–ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாக்குமூலம் பதிவு
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். பலத்த காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். லேசான காயம் அடைந்தவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அவர்கள் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள சி.பி.ஐ. தற்காலிக அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
வாகனங்கள்
அதேநேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் அலுவலக பகுதியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 207 வழக்குகளை ஒரே வழக்காக இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்கள் வசம் இருந்த 207 வழக்குகளின் ஆவணங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.
கலவரத்தில் சேதம் அடைந்த 144 வாகனங்களில் 36 வாகனங்களை அதன் உரிமையாளர்கள் பெற்று சென்று உள்ளனர். மீதம் உள்ள 67 இருசக்கர வாகனம், 8 சைக்கிள், 37 கார்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு ஆவணங்களாக பதிவு செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் நேரடியாக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று விசாரணை நடத்தினர்.
துப்பாக்கிகள்
துப்பாக்கி சூட்டின்போது பயன்படுத்தப்பட்ட 22 துப்பாக்கிகள் நெல்லை, தூத்துக்குடி, மதுரையை சேர்ந்த போலீசாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த துப்பாக்கிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு இருந்தன. இந்த பரிசோதனை விவரங்கள் மற்றும் துப்பாக்கிகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில்பட்டி கோர்ட்டில் இருந்து பெற்றனர். அதனையும் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த முதற்கட்ட விசாரணை தொடர்பாக தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணனிடம் கேட்டபோது, சி.பி.ஐ. விசாரணை தொடர்பான தகவல்களை நாங்கள் வெளியிட முடியாது. தலைமையகம் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.