எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து; விவசாயி பலி
எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலியானார்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலியானார்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் குமாரகிரி புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 72). விவசாயி. இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன் (38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ராஜேஷ் கண்ணன் ஊருக்கு வந்து இருந்தார். இதனால் நேற்று காலையில் ராஜேஷ் கண்ணன் தனது தந்தை சுப்பையா மற்றும் 1½ வயது மகள் ஹிருத்தி ஆகியோருடன் தனது காரில் கோவில்பட்டி வரை சென்றுவிட்டு வீடு திரும்ப நினைத்தார். அதன்படி ராஜேஷ் கண்ணன் காரை ஓட்டினார்.
விவசாயி
கார் எட்டயபுரத்தை தாண்டி கருங்காலிப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென சாலையில் ஒரு நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் கண்ணன் காரை திரும்பிய போது நிலைதடுமாறி, கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் காரில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். சுப்பையா மட்டும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.