மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக ரூ.3 கோடி மோசடி: வங்கி மேலாளர், டாக்டர்கள் 6 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

தனியார் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கியதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் மற்றும் டாக்டர்கள் 6 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2018-12-24 22:00 GMT
மதுரை, 


மதுரை மேலமாசிவீதி பகுதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த வங்கியில் நடந்த தணிக்கையின்போது பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், மதுரையை சேர்ந்த பல்வேறு தனியார் மருத்துவமனைகள் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு இந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் 9 மருத்துவமனைகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியை மருத்துவ உபகரணங்கள் வாங்கியதற்காக நெல்லை ஏஜென்சிக்கு காசோலைகளாக அப்போது அந்த வங்கியில் மேலாளராக இருந்த கே.பி.குமார் வழங்கி உள்ளார்.

ஆனால் அந்த ஏஜென்சியிடம் இருந்து எந்த மருத்துவ உபகரணமும் வாங்கப்படவில்லை. போலியாக ரசீது தயாரித்து அவற்றை வங்கிக்கு செலுத்தப்பட்டு உள்ளது. பின்னர் அந்த தொகை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் வங்கிக்கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வங்கி மேலாளர் கே.பி.குமாருக்கு பல லட்சங்களை கமிஷனாக, மருத்துவமனைகள் சார்பில் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த மோசடி குறித்து கே.பி.குமார், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சுப்பிரமணியன், ஜலால்ஜவகர், முத்துச்சாமி, ராஜவேல், ராஜாமணி, சாய்த்திரிரங்கன், சண்முகவேல், பானுமதி, சுந்தர்ராஜன் ஆகியோர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயன்செல்வராஜ் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையின்போது டாக்டர்கள் முத்துச்சாமி, ராஜாமணி, சாய்த்திரிரங்கன் ஆகியோர் இறந்துவிட்டனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். இதில், வங்கி மேலாளர் கே.பி.குமார் மற்றும் 6 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்