ஆலங்குடி பகுதியில் புயலில் சாய்ந்த மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை

ஆலங்குடி பகுதியில் புயலில் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-24 23:16 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதேபோல ஆலங்குடி-வெட்டன்விடுதி சாலையில் பொன்னன்விடுதி நுழைவுவாயில் பகுதியில் இருந்து கே.ராசிமங்கலம் பிரிவு சாலை வரை பல மின்கம்பங்கள் சாலை மற்றும் சாலையோரங்களில் சாய்ந்து கிடக்கின்றன.

புயல் கரையை கடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாலையில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் அவர்கள் காயமடைந்து வருகின்றனர். மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் கிடப்பதால், அந்த வழியாக செல்லுபவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக சேதமடைந்த மற்றும் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள பெண் விவசாயி விக்னேஸ்வரி கூறுகையில், ஆலங்குடி-வெட்டன்விடுதி செல்லும் சாலையில் தான் எங்களுக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே கஜா புயலால் சாய்ந்த மற்றும் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மீது மோதி காயமடைந்து வருகின்றனர். தற்போது மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு புதிய மின்கம்பங்களை நட்டு கொடுக்கின்றனர். ஆனால் இதேபோல சாலையில் சாய்ந்து உள்ள மின்கம்பங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.

மேலும் செய்திகள்