ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு

ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

Update: 2018-12-24 22:00 GMT
ஊட்டி,


ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கூடலூரை சேர்ந்த சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடலூர் நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் மாதந்தோறும் வாடகை செலுத்துவது இயலாத காரியமாக உள்ளது. இதனால் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசு வழங்கும் இலவச வீட்டுமனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கரியசோலை கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நடைபாதை, மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கவில்லை. வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வசித்து வருவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். இதுதவிர மயான வசதியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு எல்க்ஹில்க், குமரன் நகர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 500 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. சாலை, கழிப்பிட வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் வீட்டு வரியை பல மடங்கு நகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளது. மேலும் தடுப்பு சுவர்கள் பல இடங்களில் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்