ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராமநாதபுரம்,
தூத்துக்குடியில் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. தேவைப்பட்டால் அமைச்சரவையை உடனடியாக கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த அறிக்கைகள் காவல்துறையின் அத்து மீறலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு இறுதி முடிவு எடுக்கும்.
கஜாபுயல் பாதிக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகியும் பிரதமர் ஒரு இரங்கலை கூட தெரிவிக்கவில்லை. இதனை தேசிய பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். நிவாரண தொகையாக அறிவித்த தொகையையும் மத்திய அரசு தரவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.