உத்தனப்பள்ளி அருகே விபத்தில் 2 தொழிலாளிகள் பலி
உத்தனப்பள்ளி அருகே விபத்தில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபம் ஊராட்சி அயர்னப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 24). இதேபகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). இவர்கள் 2 பேரும் சூளகிரியில் கியாஸ் வெல்டிங் பட்டறையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வேலையை முடித்து கொண்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
சாமனப்பள்ளி கூட்ரோடு பகுதியில் ஒரு வளைவில் இவர்கள் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மாந்தோப்பில் புகுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முனியப்பா படுகாயம் அடைந்தார்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் முனியப்பாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சரவணனுக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். முனியப்பாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.