தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் - வாழ்வாதாரம் பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளதால், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2018-12-24 23:15 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மனு அளித்தனர். தேனி பங்களாமேடு சடையால்கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். தேனி ராஜ வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாவும், தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் சடையால்கோவில் தெருவில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டுக்கு வீட்டுவரி மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். தேனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து எங்கள் வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் நாங்கள் வீட்டை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்யாவிட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாகவும் கூறியுள்ளனர். அன்றாடம் தினக்கூலி வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, வீட்டை காலி செய்யாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 160 குடும்பத்தை சேர்ந்த 700 பேர் வாழ்ந்து வருகிறோம். ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் வாழும் நிலைமை உள்ளது. வீட்டுமனைப்பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, நாங்கள் வாழ்வதற்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் சேட் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி நகர் 29-வது வார்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கூடம் அருகில் அரசு மதுபானக்கடை செயல்படுகிறது. இதனால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மதுக்கடையையும், பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள கடையையும் அகற்ற வேண்டும். அதேபோல், பெரியகுளம் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

வடவீரநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், செங்கதிர் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘வடவீரநாயக்கன்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 150 தொகுப்பு வீடுகள் கடந்த 1983-ம் ஆண்டு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வாழும் சூழ்நிலை உள்ளது. எனவே இங்கு தொகுப்பு வீடுகளை சீரமைத்துக் கொடுப்பதோடு, வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனுவில், ‘மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். கொண்டமநாயக்கன்பட்டி, கோவில்பட்டி பகுதியில் வாழும் மக்களுக்கு மயான வசதி, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்றவை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பெரியகுளம் பங்களாபட்டி பெரியார் காலனியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சண்முகவேல் என்பவர் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஸ்டேட் பேங்க் காலனிக்கு செல்ல வேண்டியது உள்ளது. கடைக்கு சென்று திரும்பி வருவதற்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டி உள்ளது. பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டும் என்பதால் ரேஷன் பொருட்கள் வாங்கச் செல்லும் போது விபத்தில் சிக்கும் சம்பவம் அதிக அளவில் நடக்கிறது. உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பங்களாபட்டியில் முழுநேர அல்லது பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள வெண்ணியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், ‘நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது மனைவி இசக்கியம்மாள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இடி தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் சிக்கி இறந்து விட்டார். இதற்கு நிவாரணம் கேட்டு மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, எனது மனைவி இறந்ததற்கான நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி சுப்பிரமணியசிவா தெருவை சேர்ந்தவர் சபரிமூர்த்தி (வயது 48). இவருடைய மனைவி சண்முகஈஸ்வரி (42). இவர்களுக்கு காளிராஜ் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். சண்முகஈஸ்வரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது மகள் மகேஸ்வரியுடன் வந்தார். கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அவர் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், தனது கணவர் ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்து விட்டதாகவும், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வசதி இல்லாததால் உதவி செய்யுமாறும் கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது கணவர் ஆட்டோ ஓட்டி வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்துக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளதாகவும், பிணத்தை ஆந்திர மாநிலம் விஜயவாடா ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பழனிசெட்டிபட்டி போலீசார் தெரிவித்தனர். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். எனவே, எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உதவி வேண்டி மனு அளித்துள்ளேன். எனது கணவர் எப்படி இறந்தார் என்பது கூட தெரியவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்