வாட்ஸ்-அப்பில் வெளியான உரையாடலால் பரபரப்பு: “இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே, அந்த இளம்பெண்ணுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசிய உரையாடல் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ‘குடும்ப பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்க சென்ற என்னுடைய மனைவி, தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிடியில் உள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே அந்த இளம்பெண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேசிய உரையாடல் தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ்-அப்பில் வெளியான ஆடியோவில் அந்த பெண், போலீஸ் நிலையத்துக்கு வெளியில் இருந்து பேசுவதாகவும், தனது செல்போனை கணவர் பிடுங்கி உடைத்து விட்டதால், மற்றொருவரிடம் இரவலாக செல்போனை கேட்டு வாங்கி வந்து பேசுகிறேன் என்றும் கூறுகிறார்.
அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊரில் திருவிழா நடக்கிறது அல்லவா? என்று கேட்கின்றார். அதற்கு அந்த பெண், இரவில்தான் திருவிழா நடைபெறும் என்றும், நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் தனியாக பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
அதற்கு இன்ஸ்பெக்டர், நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்? என்று கேட்கின்றார். அந்த பெண், போலீஸ் நிலையத்துக்கு வெளியில் இருப்பதாகவும், போலீஸ்காரர்கள் சிலர் வெளியில் சென்று இருப்பதாகவும், போலீஸ் நிலையத்தில் சிலர் உங்களுக்காக காத்து இருப்பதாகவும், தனது அருகில் குற்றவாளி ஒருவர் நின்று கொண்டு இருப்பதாகவும் அந்த பெண் கூறுகின்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணிடம், அங்குள்ள ஒரு சாலையில் தனியாக நடந்து செல்லுமாறும், தான் காரில் வந்து தனியாக உன்னை அழைத்து செல்வதாகவும் கூறுகின்றார். அதற்கு அந்த பெண், தனியாகவா நடந்து செல்ல வேண்டும்? என்று கேட்கின்றார். பின்னர் அந்த பெண் அங்கு இருந்து புறப்பட்டு செல்கின்றார்.
இவ்வாறு அந்த உரையாடலில் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான உரையாடலில் உள்ளது தனது குரல் அல்ல என்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.