சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குளிக்கச்சென்ற போது பரிதாபம்

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-12-24 22:30 GMT
சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கிரண் (வயது 7). இவன் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் துரைசாமிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் கோபி (11). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கோவிந்தனும், வெங்கடேசும் உறவினர்கள்.

இந்த நிலையில் பள்ளிக்கூட விடுமுறைக்காக கோபி தனது பெற்றோருடன் சேர்ந்தமரத்திற்கு வந்தான். நேற்று முன்தினம் மாலையில் கிரண், கோபி ஆகியோர் குளிக்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு, ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள பாட்டக்குளத்துக்கு சென்றனர். அங்கு 2 பேரும் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ‘காப்பாற்றுங்கள்‘, ‘காப்பாற்றுங்கள்‘ என்று அவர்கள் அபய குரல் எழுப்பினர். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வெகு நேரம் ஆகியும் 2 பேரும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்தனர்.


அவர்கள் 2 பேரையும் தேடி, குளத்து பகுதிக்கு சென்றனர். அங்கு குளத்தின் கரையில் கோபி, கிரணின் ஆடைகள் இருந்தன. உடனே அங்கு இருந்தவர்கள் குளத்தில் இறங்கி 2 பேரையும் தேடினர். இரவில் 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்