தூத்துக்குடியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரபு தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜூ மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் விஷ்ணு ராம் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ள மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். கேபிள் டி.வி.களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து கொடுத்தனர்.