குளச்சல் அருகே புதுமாப்பிள்ளை ‘திடீர்’ சாவு மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற போது பரிதாபம்
குளச்சல் அருகே திருமணமான 12-வது நாளில் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார்.
குளச்சல்,
நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குளச்சல் அருகே பாலப்பள்ளத்தை சேர்ந்த உஷா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 12 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தந்தை வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.
அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைபார்த்த உஷாவும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, மணியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார், பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.