ஏரந்தாங்கல் கிராமத்தில் பள்ளி வளாகத்தில் அரசு அலுவலகங்கள் கட்டுவதை தடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு

பள்ளி வளாகத்தில் அரசு அலுவலகங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Update: 2018-12-24 23:15 GMT

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் காட்பாடியை அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அந்தப்பகுதியை சேர்ந்த மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் இல்லை. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் கிராமநிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பள்ளிக்கு தேவையான கட்டிடம் கட்டவோ, மைதானம் அமைக்கவோ இடவசதியில்லாமல் போகும் நிலை ஏற்படும். எனவே மாணவ– மாணவிகளின் நலனை கருதி ஊராட்சி மன்ற கட்டிடம், கிராமநிர்வாக அலுவலகம் கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு இடம் கொடுத்து இதுவரை வேலை கிடைக்காதவர்கள் கொடுத்துள்ள மனுவில், பெல் நிறுவனத்திற்கு எங்களுடைய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் 28 ஆண்டுகளாகியும் எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்டும் வேலை வழங்கவில்லை. 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நாட்டறம்பள்ளி தாலுகா புத்துக்கோவில் பொரிகாரன் வட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தோல்கழிவுகளை லாரியில் கொண்டுவந்து கொட்டி உள்ளனர். பொதுமக்கள் தடுத்தும் அவர்கள் கேட்காமல் கழிவுகளை கொட்டி உள்ளனர். இதனால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. கிணற்றில் கொட்டப்பட்டுள்ள தோல் கழிவுகளால் குடிநீர் மாசுப்படுகிறது. எனவே கிணற்றில் கொட்டப்பட்டுள்ள தோல் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆண்டியப்பனூரை சேர்ந்த கண்ணன் (வயது 85) என்பவர் கொடுத்துள்ள மனுவில் எனக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனக்கு 3.76 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் பெறுவதாகக்கூறி எனது மகன் என்னை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துகொண்டான். தற்போது என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டான். இதனால் நான் மாட்டுக் கொட்டகையில் வசித்து வருகிறேன். எனவே போலியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து எனது மகள்களுக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் அவசர சிகிச்சை பயிற்சி பெற்றவர்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில், முறையாக அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற எங்களை அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்க்காமல் 8 மற்றும் 10–ம் வகுப்பு படித்தவர்களை கொண்டு பணியிடத்தை நிரப்பி வருகிறார்கள். எங்களுக்கு பணி வழங்க மறுக்கிறார்கள். எங்களுக்கு பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கூட்டத்தில் மனு கொடுத்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஒருவருக்கு ஊன்றுகோல், ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை ஆகியவற்றை கலெக்டர் ராமன் வழங்கினார்.

மேலும் செய்திகள்