உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாறியது

பல்லடம் அருகே உயர்மின்கோபுரங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாறியது.

Update: 2018-12-23 22:15 GMT
காமநாயக்கன்பாளையம், 

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைப்பதை கைவிட கோரி பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு தொடர் போராட்டம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தின் 7-வது நாளான நேற்று விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.

அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, விஸ்வநாதன், பச்சியப்பன், தர்மராஜ் உள்பட 16 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை காங்கேயம் எம்.எல்.ஏ. தனியரசு தொடங்கி வைத்தார். தஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு முன்னிலை வகித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நில உச்சவரம்பு சட்டம்

சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் ஒரே சட்டம் தானே. டெல்லியில் அரசு ஊழியர்கள் போராடலாம். வீடுகளுக்கு கியாஸ் போடுபவர்கள் போராட லாம். ஆனால் விவசாயிகள் போராட அனுமதியில்லை. கஜா புயலில் எத்தனை லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை இன்னும் சரி செய்ய முடியவில்லை. இதே போல் நாளை வேறு ஒரு புயல் வந்தால் இப்போது போடப்படும் உயர்மின்கோபுரங்கள் சாயாதா? இப்படி வருடம் ஒரு புயல் வரும். மின்கம்பங்கள் சாயும். இதற்கு ஏன் கோடிகளில் வீண் செலவு. உயர்மின் கோபுர பாதை அருகில் சென்றால் புற்றுநோய் வரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். விளைநிலங்களில் அமைக்கப்படும் போது அதன் அருகே செல்லும் விவசாயிகளின் நிலை என்னவாகும். எனவே விவசாயிகளின் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும். உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அங்கு ஒரு விவசாயி 1000 ஏக்கர் நிலம் வைத்து கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் உள்ளது. எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கையான உயர்மின்கோபுரம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, ‘தங்கள் விளை நிலத்தை உயர்மின் கோபுர பாதையானது காவு கொள்வதை கண்டு விவசாயிகள் கதி கலங்கி நிற்கிறார்கள். தங்களின் கடைசி சொத்தான விளைநிலத்தை தக்க வைக்க இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உயர் மின்கோபுர பாதைக்கு பதிலாக கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தலாம்’ என்றார்.

முன்னதாக பிடுங்கப்பட்ட ஒரு தென்னை மரத்தை போராட்டம் நடைபெறும் இடத்தின் முன்பு போட்டு அதன் முன் விவசாயிகள், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்ட பந்தலின் முன்பு காய்கறிகளை கட்டி தொங்க விட்டு இருந்தனர். 

மேலும் செய்திகள்