மதுரை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல் - திண்டுக்கல் வாலிபரிடம் விசாரணை
மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திண்டுக்கல் வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை,
துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த முகமது அலி(வயது 31) அங்கு வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது.
அவர் கொண்டு வந்த உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் கொண்டு வந்த அட்டை பெட்டிகளில் பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட் இருந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் அந்த சிகரெட் பண்டல்களை தனித்தனியாக பிரிந்து சோதனை செய்தபோது, அதற்கிடையில் துணியில் சுற்றியவாறு 94 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கமும் இருந்தது.
இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சுங்க புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபு கூறுகையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்களின் சொந்த உபயோகத்திற்கு 100 வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வரலாம். ஆனால், 100-க்கும் மேல் கொண்டு வந்தால் அதற்கு வரி கட்டிவிட்டு எடுத்து செல்லலாம். ஆனால் வியாபார நோக்கில் சிகரெட்டுகளை கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.
தற்போது பிடிபட்டுள்ள சிகரெட் பண்டல்கள் அனைத்தையும் வியாபாரம் செய்வதற்காக துபாயில் இருந்து கடத்தி வந்துள்ளார். அதன் காரணமாக அதனை பறிமுதல் செய்திருக்கிறோம். அதுபோல், அந்த தங்கத்தையும் கடத்தி கொண்டு வந்துள்ளார். இந்த பொருட்களின் மொத்தமதிப்பு ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 150 இருக்கும் என்றார்.