அரசு பள்ளிகளில் இசை-நாட்டிய ஆசிரியர் நியமனம் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இசை-நாட்டிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை உலகத்தமிழ்சங்க வளாகத்தில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை விழா நடந்தது. கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்வளர்ச்சி, கலைபண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல், கைவினைத்துறை ஆகிய 5 துறைகளை இணைத்து ஒருங்கிணைந்த பண்பாட்டுத்துறை வெகுவிரைவில் உருவாக்கப்படும். இதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்தில் நமது பழங்கால இசைகருவிகள் இடம்பெற்றுள்ள ஒரு அரங்கு கலைப்பண்பாட்டுத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு இசை ஆசிரியர் மற்றும் ஒரு நாட்டிய ஆசிரியர் நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இசை நகரம் என்று சென்னைக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது உங்களுடைய முயற்சியால்தான். சோழிங்கநல்லூரில் ரூ.60 கோடி செலவில் இசை பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. இசைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிவன் கோவில்களில் எப்படி ஓதுவார்கள் உள்ளனரோ அதேபோல் தனியார் பங்களிப்புடன் நமது ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் பாட வைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பள்ளிகளில் பயிலும் 1,000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இசைப்பள்ளிகள் அனைத்தையும் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயக் கல்லூரிகள் போல மாற்றுவதற்கு முயற்சி எடுத்து செயல்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 10 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசைக் கருவிகள் அல்லது நடனக்கருவிகள் வாங்குவதற்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. கலைக்குழுவிற்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி என ஒதுக்கப்பட்டுள்ள நிதி தற்பொழுது ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நினைவகங்களிலும் செய்தித்துறையின் மூலம் இசை இசைப்பதற்கு நிரந்தர கலைஞர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள நடிகர் சிவாஜிகணேசன் நினைவு இல்லத்தில் இந்த இசை நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலை உலகிற்கு பெருமை சேர்க்கின்ற மாவட்டங்களாக தஞ்சாவூர் மற்றும் மதுரை திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக 17 மாவட்டங்களை சேர்ந்த அரசு இசைப்பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். விழாவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆலோசகர் பூர்ண புஷ்கலா, மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குனர் மு.க.சுந்தர், சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.