சிறுமியை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை 22 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கற்பழித்தவருக்கு சம்பவம் நடந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
சிறுமியை கற்பழித்தவருக்கு சம்பவம் நடந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
சிறுமி கற்பழிப்பு
நாசிக்கை சேர்ந்தவர் மச்சிந்திரா (வயது41). இவர் கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தனது கடைக்கு மருந்து வாங்க வந்த 11 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மச்சிந்திராவை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது நாசிக் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், 1997-ம் ஆண்டு மச்சிந்திராவை கோர்ட்டு விடுதலை செய்தது.
ஆயுள் தண்டனை
இதை எதிர்த்து மாநில அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது மச்சிந்திரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பவம் நடந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு மச்சிந்திராவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.