ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட மாட்டார் சித்தராமையா சொல்கிறார்

ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட மாட்டார் என்று சித்தராமையா கூறினார்.

Update: 2018-12-23 22:15 GMT
பெங்களூரு, 

ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட மாட்டார் என்று சித்தராமையா கூறினார்.

வாக்காளர்களுக்கு நன்றி

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் காங்கிரஸ் சார்பில் நேற்று பாகல்கோட்டையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போட்டியிட மாட்டார்

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். அந்த தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட மாட்டார். அது தொடர்பாக வெளியான தகவல்கள் தவறானது. அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இருந்தே போட்டியிடுகிறார்.

மந்திரி பதவி கிடைக்காததால் பி.சி.பட்டீல் மற்றும் மந்திரி பதவி பறிபோனதால் ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் அதிருப்தியில் இருப்பது சகஜமானது தான். அனைவரும் கட்சி மேலிட முடிவை ஏற்க வேண்டும்.

முதல்-மந்திரி ஆகிவிடலாம்

ரமேஷ் ஜார்கிகோளியுடன் பேசுவேன். முதல்-மந்திரி ஆகிவிடலாம் என்று எடியூரப்பா பகல் கனவு காண்கிறார். எடியூரப்பாவின் பேச்சுக்கு மரியாதை இல்லை. எடியூரப்பா பொய் பேசுவதை அதிகரித்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்