பொங்கல் பரிசாக கள் இறக்க விதித்த தடையை நீக்க வேண்டும் - நல்லசாமி பேட்டி
பொங்கல் பரிசாக, கள் இறக்க விதித்த தடையை அரசு நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளருமான நல்லசாமி கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடைக்கானல்,
பொங்கல் பரிசாக, தமிழக அரசு கள் இறக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். நீராபானம் இறக்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,750 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே சமயம் அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
‘கஜா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும். ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த ஆய்வுக்குழு அவசியம் இல்லாதது. தற்போது செயற்கைக்கோள் மூலம் அனைத்தையும் கண்டு பிடித்துவிடலாம். எனவே அவற்றை கண்டறிந்து உரிய உதவித் தொகைகளை விரைவாக வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கி கடன்களை வசூல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு தடை செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அதற்கு பதிலாக தற்போது எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் மேலும் 20 மணல் குவாரிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனவே ஆற்று மணலை எடுக்கக் கூடாது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.