தடை நீக்கம் எதிரொலி: திருச்சி முக்கொம்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தடை நீக்கம் எதிரொலியால் திருச்சி முக்கொம்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஜீயபுரம்,
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள சுற்றுலா தலம் முக்கொம்பு. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்ட மக்களுக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக முக்கொம்பு விளங்குகிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் ஆகிய ஊர்களை கடந்து வடமேற்கு பகுதியில் காவிரி ஆற்றிணை தடுத்து, மூன்றாக பிரித்து விடும் பகுதியாக முக்கொம்பு அமைந்துள்ளது. இங்குதான் காவிரி மேலணை, கொள்ளிடம் மேலணை உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளிடம் மேலணையில் உள்ள 9 மதகுகள் உடைந்து அடித்து செல்லப்பட்டது.
அதன் பின்னர் முக்கொம்பு சுற்றுலா மையம் மற்றும் முக்கொம்பு பூங்கா மூடப்பட்டு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
படகு சவாரி, மீன் பிடித்தல், குழந்தைகளுடன் குடும்பத்தினர் பொழுதுபோக்கவும், காதலர்களின் சொர்க்க பூமியாகவும் முக்கொம்பு விளங்குகிறது. அதோடு மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு தட்பவெப்ப நிலை சீராக இருக்கும். தற்போது குளிர்காலம் என்பதால் பகல் வேளையில் முக்கொம்பு மிகவும் ரம்மியமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்று தரிசித்து விட்டு அப்படியே முக்கொம்புக்கு செல்கிறார்கள்.
கொள்ளிடம் மதகுகள் உடைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு தடை விலக்கப்பட்டது. இதனால், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் சீறிப்பாயும் தண்ணீரை கரைகளில் அமர்ந்தபடி ஆனந்தமாக ரசித்து வருகிறார்கள். காவிரி ஆற்றில் தூண்டில் போட்டும், வலை விரித்தும் மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு குழந்தைகளை குதூ கலிக்க செய்யும் வகையில் குரங்குகள் அட்ட காசம் செய்து வருகின்றன. உணவுக்காக அலையும் குரங்குகள் சுற்றுலா பயணிகள் சாப்பிடுவதற்கு ஏதாவது தரமாட்டார்களா என பின்தொடர்ந்து செல்கின்றன.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் மதகு உடைந்த இடத்தில் லட்சக்கணக்கான மணல் மூட்டைகள் போடப்பட்டும், பாறாங்கற்கள் போடப்பட்டும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தற்காலிக தடுப்புகளின் இடையே வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறி வருகிறது. அவற்றில் இளைஞர்கள் தூண்டில் மூலம் மீன்பிடித்து பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் நீர்காகம், கொக்கு உள்ளிட்ட பறவைகள் கூட்டமாக இரை தேடி பறந்து வருகின்றன. இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு முக்கொம்பு காவிரி கரையோரம் உள்ள சுற்றுலா தலத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைதாண்டி கொள்ளிடம் மேலணை பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.