வேலூரை உலக அளவில் உயர்த்தியவர் ஜி.விசுவநாதன் முத்து விழாவில் தலைவர்கள் புகழாரம்

வேலூரை உலக அளவில் உயர்த்தியவர் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் என்று அவருடைய முத்துவிழாவில் பேசிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.;

Update: 2018-12-23 22:15 GMT
வேலூர், 

வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதனின் 80-வது பிறந்தநாள் முத்து விழாவாக நேற்று வேலூரில் கொண்டாடப்பட்டது. காலையில் நடந்த விழாவுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். விழாக்குழு செயலாளர் சுகுமார் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ‘வியர்வையின் வெற்றி’ என்ற நூலை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட, புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார். ‘ஸ்டார்ஸ் அண்டு சேப்ளிங்ஸ்’ என்ற நூலினை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வெளியிட, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி.கே.கணேஷ் பெற்றுக்கொண்டார். ‘வேந்தர் 80’ கவி மலரை முன்னாள் அமைச்சர் பொன்னையன் வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக்கொண்டார். பகல் 12 மணிக்கு முளைப்பாரியும், அதனைத்தொடர்ந்து கவியரங்கமும் நடந்தது. இதில் வேந்தர் ஜி.விசுவநாதனின் சேவைகள் குறித்து பல்வேறு கவிஞர்கள் பேசினர்.


மாலை 5 மணிக்கு நடந்த விழாவுக்கு தமிழ்த்தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாக்குழு தலைவர் மு.வெங்கடசுப்பு வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே கலந்து கொண்டு முத்துவிழா மலரினை வெளியிட, து.ராஜா எம்.பி. பெற்றுக்கொண்டார்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் வேந்தர் ஜி.விசுவநாதனின் அரசியல் பணி, கல்விப்பணி, சமூக சேவைகள் குறித்தும், அவர் இன்னும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினர். அப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரம், காவிரி நீர் பிரச்சினை என்று தமிழர்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகள் கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதை தீர்க்க ஜி.விசுவநாதன் போன்றவர்கள் தலையிட்டால் தீர்க்க முடியம். அதற்கு அவர் முன்வரவேண்டும். தீராத மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தமிழக மக்கள் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். அதனை ஜி.விசுவநாதனால் உருவாக்க முடியும். இவர் கால்பதிக்காத துறையே இல்லை. வேலூரை உலக அளவில் கொண்டு சென்றவர் என்று புகழாரம் சூட்டினர்.

இதனை தொடர்ந்து வேந்தர் ஜி.விசுவநாதன் ஏற்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “உலகத்திலேயே அதிக கட்சிகள் உள்ள நாடு இந்தியாவாகும். ஆனால் எந்த கட்சியும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கல்விக்கும் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்த கட்சியும் பேசவில்லை. மத்திய, மாநில அரசுகள் பள்ளி கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உயர்கல்விக்கு அளிப்பதில்லை. அறிஞர் அண்ணா சொன்னபடி நல்ல கருத்துகளை எந்த கட்சியினர் சொன்னாலும் அதனை ஏற்று, செயல்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இங்குள்ள தொழில்நிறுவனங்கள் வெளியே செல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். புதிய தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க கொண்டு வர வேண்டும்.

‘உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம், நான் வாக்களிக்கிறேன்’ என்று ஒவ்வொரு மக்களும் நினைத்து செயல்பட்டால் லஞ்சம், ஊழல் குறையும். கல்வி வளர்ச்சியடையும்” என்றார்.

விழாவில் அரசியல்கட்சி தலைவர்கள், குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், குடியாத்தம் கம்பன்கழக நிறுவனர் ஜே.கே.என்.பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள், இந் நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வேந்தர் ஜி.விசுவநாதனை அவருடைய வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்