உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு சுல்தான்பேட்டையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுல்தான்பேட்டை,
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் விளைநிலம் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தினால் தங்களின் விளைநிலத்தின் மதிப்பு கடுமையாக குறையும். விளைபொருட்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். வங்கி கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே தங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை அரசு கைவிட்டு, இதற்கு பதிலாக கேரளாவை போல் சாலையோரங்களில் கேபிள் அமைத்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் சுல்தான்பேட்டையில் கடந்த 17-ந் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
6-வது நாளான நேற்று முன்தினம் இத்திட்டத்தை கைவிட்டு, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், காங்கயம் எம்.எல்.ஏ.வுமான தனியரசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்பட பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, விவசாயிகள் பலர் மாட்டு வண்டிகளுடன் உண்ணாவிரத போராட் டத்திற்கு வந்து தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:-
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தாமதம் ஆனால், சென்னையில் அடுத்த கட்டபோராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்துவோம். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் முடிவு என்ன ஆயிற்று. அதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்படும் என்பதை மத்திய பா.ஜனதா அரசு உணர வேண்டும். குஜராத்தை போன்று கேபிள் மூலம் மின் திட்டங்களை ஏன் இங்கு செயல்படுத்த முயற்சிக்கவில்லை.
இது ஜனநாயக நாடு சர்வாதிகார நாடு அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும். விவசாயி எனும் சாது மிரண்டால் காடு தாங்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.