ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதை வரவேற்கிறோம் நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டை மேட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கொங்கு வேளாள கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜன், மாநாட்டு நிதிக்குழு தலைவர் சின்ராஜ், மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு குழு செயலாளர் மாதேஸ்வரன் வரவேற்றார்.
கூட்டத்தில், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈஸ்வரன் பேசினார். இதையடுத்து ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
நாமக்கல்லில் நடைபெற உள்ள 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் 26 நாடுகளில் உள்ள கொங்கு நாட்டை சேர்ந்த மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
எனவே அது உலக கொங்கு தமிழர் மாநாடாக தான் நிச்சயம் இருக்கும். மின்சார வாரியம் மின் கோபுரங்களை அமைப்பதால் விவசாய நிலங்களை எடுக்க முயற்சிக்கிறது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோக வாய்ப்பு உள்ளது. அதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து கொங்கு நாட்டில் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர். தற்போது உண்ணாவிரத போராட்டமாக அதை மாற்றி உள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு நான் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து உள்ளேன். தொடர்ந்து மற்ற இடங்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க உள்ளோம். நில மதிப்பீட்டில் 15 சதவீதம் இழப்பீடு தருவதாக அரசு சொல்கிறது. ஆனால் மின்கோபுரம் அமைக்கப்படும் இடத்தின் அருகே உள்ள 5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு போய்விடும்.
உலகத்தில் எங்குமே நிலத்திற்கு அடியில் உயர்மின் அழுத்த மின்சார வடங்களை எடுத்து செல்லவில்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால் கேரள மாநிலத்தில் நிலத்திற்கு அடியில் கொண்டு சென்று உள்ளனர். அதை விவசாய சங்கத்தினர் படம் எடுத்து வந்து ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பரப்பி வருகின்றனர்.
பக்கத்து மாநிலத்தில் செய்யும்போது ஏன் இங்கே முடியாது. 2½ மடங்கு செலவு செய்து நிலத்திற்கு அடியில் அதை அமைத்தால் என்ன தவறு?. வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக சொல்கிறார் கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எரிவாயு குழாய் பிரச்சினை வந்தது. அப்போது அவர் விவசாயிகளின் பக்கம் நின்றார். மத்திய அரசு எரிவாயு குழாய் பதிப்பதை விடமாட்டோம் என சொன்னார். கேரளாவில் நிலத்திற்கு அடியில் மின்சார வடங்கள் எடுத்துச் செல்லப்படுவதை காண்பித்துவிட்டால் அமைச்சர் முடிவை மாற்றிக் கொள்வாரா?. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர்பேசினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் பாலு, மாநில விவசாய அணி தலைவர் கோபால்சாமி, துணை செயலாளர் சந்திரசேகர், துணை பொதுச்செயலாளர்கள் தங்கவேலு, நடராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநாட்டுக்குழு தலைவர் நதிராஜவேல் நன்றி கூறினார்.