கோவில்பட்டியில் ஆவின் பாலகம் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஆவின் பாலகம் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஆவின் பாலகம் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் திறக்க கடந்த 14-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் ஆவின் பாலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின்னர் அதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி, கடந்த 21-ந் தேதி பயணிகள் விடுதி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையத்தில் உள்ள 25 கடைக்காரர்கள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு, ஆவின் பாலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களுடன் 5-வது தூண் தலைவர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர், மருத்துவ முன்னேற்ற கழக நிர்வாகிகள் கருப்பசாமி, மகேந்திரன், அண்ணா பஸ் நிலையம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால் அங்கு இருந்து கலைந்து சென்ற வியாபாரிகள், அருகில் பயணிகள் விடுதி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சாலை ஆய்வாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ராஜூ ஆகியோர் செல்போன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (அதாவது இன்று) மதியம் 2 மணிக்குள் அந்த கடைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும். ஆவின் பாலகம் அகற்றப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். இதனால் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு, மீண்டும் வியாபாரத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.