விளாத்திகுளம் அருகே அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மோதல்; கைகலப்பு

விளாத்திகுளம் அருகே அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2018-12-23 22:00 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் நேற்று காலையில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மார்க்கண்டேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மோதல்

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேச அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பனின் ஆதரவாளர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மார்க்கண்டேயன் ஆதரவாளர்களுக்கும், சின்னப்பன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதைப் பார்த்து மேடையில் இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இறங்கி வந்து, இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை.

பாதியில் ரத்து

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமைச்சர் கடம்பூர் ராஜூவை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த திடீர் கோஷ்டி மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்